தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா.. 45 பேர் உயிரிழப்பு… மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி
7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 4314 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,55,170 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 34,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையிலும் தொடர்ந்து 4 – வது நாளாக ஆயிரத்திற்கு கீழாக தொற்று பாதிப்பு படிப்படியாக கீழிறங்கி வருகிறது. இன்று 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 93 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 285, செங்கல்பட்டு 193, திருவள்ளூர் 170, திருப்பூரில் 155 பேர், சேலத்தில் 140 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 81,259 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.75 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.





