தமிழக காங்.,மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா… சென்னையில் 2 நாள் முகாமிட்டு திரும்பிய நிலையில் தொற்று பாதிப்பு!!
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24, 25 தேதிகளில் சென்னையில் முகாமிட்டு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தினேஷ் குண்டுராவ் சந்தித்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பாதிப்பு, இந்தியாவில் அரசியல் மற்றும் விஐபிக்கள் பலரையும் கதிகலங்கச் செய்து வருகிறது. தமிழக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. என கடந்த சில தினங்களில் மட்டும் முக்கியப் புள்ளிகள் கொரோனா பாதிப்பதில் உயிரிழந்துள்ளனர். கர்நாடக துணை முதல்வர், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்
இந்நிலையில் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவுக்கு இன்று கெரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் தினேஷ் குண்டுராவ், கடந்த 24, 25 தேதிகளில் சென்னையில் முகாமிட்டிருந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் அலுவலமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2 நாட்களும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேலும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தினேஷ் குண்டு ராவ் சந்தித்து விட்டு பெங்களுரு திரும்பினார். இந்நிலையில் தான் குண்டு ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக அவரே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் சமீப நாட்களில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தித்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி அறிவாலயத்தில் குண்டு ராவுடன் சந்திப்பு நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகளையும் கலக்கமடையச் செய்துள்ளது.








