கேரளாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
கேரளாவில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து நாடெங்கும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து கேரளா வந்த 3 மருத்துவ மாணவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பிய நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு கற்றோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய பத்தனம்திட்டாவை சேர்ந்த 50 வயது தம்பதி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே கே சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி கொச்சி விமான நிலையம் வந்த அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தாலியிலிருந்து வந்த தம்பதி மூலம் அவர்களது உறவினர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து வந்தவர்கள் பயணித்த விமானத்தில் அனைத்து பயணிகளும் மற்றும் பணியாளர்களும் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளுமாறு கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கேரளாவில் அனைத்து பொதுக் கூட்டங்களும், மத வழிபாட்டு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.வெளிநாடு சென்று வந்தவர்கள் அனைவரும் அதுகுறித்த விவரத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதை செய்யத் தவறுவது சட்டவிரோதமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அதை அரசிடம் தெரிவிக் காமல் இருப்பதும் குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறையும் எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று நடைபெறும் ஆட்டுக்கல் பகவதியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடத்துவதற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்துமாறு மாநில அரசு நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிதாக 52 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தியுள்ளது.






