--- --:--:-- --

கொரோனா : டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை… பாடங்களை குறைக்கலாம்.. ஆனால் கட்டணம் குறைக்க முடியாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு!!

setg

இந்தியாவில் அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் மழைக்காலத்தில் பள்ளிகளை திறந்தால் கொரோனா பரவல் கைமீறி சென்றுவிடும்.தனிமனித இடைவெளியை பள்ளிகளில் பின்பற்றுவதும் கடினம்.

 

எனவே இந்தாண்டுக்கான பாடத்திட்டத்தை குறைத்து டிசம்பரில் பள்ளிகளை திறக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அதே வேளையில் கல்விக் கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா என்னும் கொடிய வைரசின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்த நாடுகளும் கதிகலங்கி நிற்கின்றன. கொரோனா பரவல் விஸ்வரூபமெடுத்து 4 மாதங்களைக் கடந்த பின்பும் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் அத்தனை துறைகளும் முடங்கி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

 

அது மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் வருங்கால சந்ததியினரின் கல்வியும் கேள்விக்குறியாகி விட்டது. இந்தியாவிலும் கொரோனோ பரவல் உச்சத்திலிருக்கும் இன்றைய சூழ்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது.

 

வரும் நாட்களில் நோயின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் அக்டோபர் மாத வாக்கில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்துள்ள நகரங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை ஒன்றை சமீபத்தில் நடத்தி உள்ளனர்.அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

அதன்படி, அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறந்தால் நோய்ப்பரவல் கைமீறி சென்றுவிடும்.பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்வதும் கடினம்.

 

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும்.

 

நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால், பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது, சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைத்து பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பது , வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம்.

 

தற்போதைய நிலையில் கல்விக் கட்டணத்தை குறைக்க இயலாது. மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு 80% செல்வதால் அதற்கு சாத்தியமில்லை. என்பது போன்ற முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon