ஜுன் 30-ந் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடருமா? மருத்துவ நிபுணர்களுடன் 29-ந் தேதி முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை!!
தமிழகத்தில் ஜுன் 30-ந் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில், மேலும் தொடர்வது தொடர்பாக வரும் 29-ந் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் மிக மோசமாகி வரும் நிலையில் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஒன்று முதல் 5 கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 90 நாட்களை கடந்து விட்டது. ஆனால் என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதற்கு, ஊரடங்கு காலத்தில் மக்களின் அலட்சியம் காரணம் என குறை கூறுகிறது அரசு.ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பிலோ கொரோனா கட்டுப்படுத்தலில் தமிழக அரசு போதிய நடவடிக்கை இல்லை என குறை கூறுகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவு நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகம் இருந்த நிலையில் சமீப நாட்களாக மாநிலம் முழுவதுமே தொற்று எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து பீதி கிளம்பியுள்ளது. இதனால் ஊரடங்குக்குள் முழு ஊரடங்கு என சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 18ந் தேதி முதல் கெடுபிடி உத்தரவு போடப்பட்டுள்ளது.
மதுரை, தேனி போன்ற மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களுக்கு முன் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்தும் தற்போது மாவட்டங்களுக்குள் மட்டும் என முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு ஜுன் 30-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது தான் கொரோனா நிலவரம் கலவரமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் உச்சத்தில் உள்ளது.
நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 3500 ஐ கடந்த நிலையில் இன்றைய பாதிப்பு மேலும் கூடுதல் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்பட்டு நீட்டிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 29-ந் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தும் முதல்வர் எடப்பாடி ஊரடங்கு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






