சாத்தான்குளம் சம்பவம் : ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகள் படும் பாடும் சொல்லி மாளாது. போலீசின் கெடுபிடி மற்றும் சித்ரவதையால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி கடையை திறந்திருந்ததாகக் கூறி ஜெயராஜையும், அவரது மகன் பென்னிக்சையும் போலீசார் கைது செய்து சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்து வியாபாரிகளும், பொதுமக்களும் கொந்தளித்தனர். சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து, இரட்டை கொலை வழக்குப்பதியக்கோரி போராட்டங்களும் தீவிரமடைந்தன. இருவரின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் உரிய நீதி கேட்டு இருவரின் உடல்களையும் வாங்க மறுத்து, ஜெயராஜின் குடும்பத்தாரும் உறவினர்களும் போராடினர். இதனால் இந்த சிறை மரண விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இந்த மரணம் தொடர்பாக விளக்கமளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
இறுதியில் போஸ்ட் மார்டம் அறிக்கைப்படி உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து நேற்று உடல்களை வாங்க ஜெயராஜ் குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உடல்கள், நெல்லை அரசு மருத்துவம்னையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள், சாத்தான்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இருவரின் உடல்கள் மேல சாத்தான்குளத்தில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலய கல்லறை தோட்டத்தில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களது உறவினர்களும் , வணிகர்களும் ஏராளமாக திரண்டு அவர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். திமுக எம்.பி.கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இருவரின் சிறை மரணம் தொடர்பான
நீதிக்கான போராட்டத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






