மேட்டுப்பாளையம் காவல் துறை மற்றும் ஓவியர்கள் சங்கம் இணைந்து தீட்டப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு !!!
சீனாவின் ஊகான் மாநிலத்தில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்தது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் இந்நோயின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக கொரோனா நிலவரம் பற்றிய தகவலை சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார். இந் நிலையில் இன்று தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும் அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் விரிவாக எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 9 11 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் 71 வயது பெண் இன்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்றவர்களில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பலரும் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்தார்.

மேலும்,தற்போதைய புள்ளி விபரப்படி வைரஸ் தொற்று பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை. 2-ம் கட்டத்தில் தான் உள்ளது. 3 -ம் கட்டத்திற்கு செல்லக் கூடாது என்பதற்காகவே கடுமையாக போராடி வருகிறாம். எனவே சமூகப் பரவல் இல்லை; மக்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய,மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 60 ஆக மட்டுமே இருந்தது.கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 86 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.இதில் தமிழக காவல் துறையின் பங்கு அளப்பரியது.குறும்படங்கள் மூலம் தமிழக காவல் துறை சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன்,முரளி உள்ளிட்ட காவல் துறையினரும் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கமும் இணைந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் தீட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்களில் சிலர் கூறுகையில் மேட்டுப்பாளையம் காவல் துறையினரும்,ஓவியர் சங்கத்தினரும் இணைந்து தீட்டப்பட்டு வரும் இந்த ஓவியம் முழுக்க பெயிண்டால் தீட்டப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இருந்தாலும் சிலர் அத்தியாவசிய தேவைகளுக்கு அரசு அறிவித்த நேரத்தில் பொருட்களை வாங்க செல்லும் பொழுது போதுமான சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்.இவ்வைரஸ் பரவலை தடுக்க காவல் துறையினரும்,ஓவியர் சங்கத்தினரும் இணைந்து தீட்டிய இந்த ஓவியம் தங்களிடையே விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல் துறையும்,ஓவியர்கள் சங்கமும் இணைந்து தீட்டப்பட்டு வரும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







