பிகாரில் இன்று முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு..!
பிகாரில் பாஜக உதவியுடன் ஆட்சி அமைத்த முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற உள்ளது. பிகார் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து மகா பந்தன் என்ற புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக நிதிஷ்குமாரும் துணை முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் ஆட்சி செய்து வந்தனர்.
பாஜக ஆட்சிக்கு எதிராக உருவான இந்தியா கூட்டணிக்கு முக்கிய அடித்தளமாக நிதிஷ்குமார் இருந்தார். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம், பாட்னாவில் அவர் தலைமையில் நடைபெற்றது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் யார் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகா பந்தன் கூட்டணியில் விலகுவதாக திடீரென அறிவித்த நிதிஷ்குமார், ஆட்சியை கலைத்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைத்துள்ளார். அவரது அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 உறுப்பினர்கள் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 128 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகா பந்தன் கூட்டணிக்கு 114 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது.தெலங்கானாவில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பிகார் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விமானம் மூலம் பட்னா புறப்பட்டுச் சென்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டுள்ளார்.





