கோவை to தேவகோட்டை ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் போதை டிரைவர்கள்.. பயணிகள் திக்.. திக்..பயணம்
கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை இயக்குவதால் திக்.. திக் ..மன நிலையில் தான் உயிரை கையில் பிடித்தபடி பதற்றத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
அது மட்டுமின்றி பார்சல் அனுப்புபவர்கள் படும் பாடும் சொல்லி மாளாது. உரிய இடத்தில் பார்சலை கொண்டு சேர்க்காமல் அலைக்கழிப்பதும், தேவகோட்டை சென்றவுடன் பேருந்தை பார்சல்களுடன் ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தி போதை மயக்கத்திலேயே டிரைவர்கள் தூங்குவதும் வாடிக்கையாகி விட்டது. அதுவும் தீபாவளிக்கு முன் தினம் அரங்கேறிய கூத்து சொல்லி மாளாது என்ற அளவுக்கு பெரும் களே பாரமே அரங்கேறி விட்டது.
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் என்றாலே கொள்ளையோ கொள்ளை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான். அதுவும் திருவிழா, பண்டிகை, விடுமுறை தினங்கள் என்றால் இவர்கள் நடத்தும் கட்டணக் கொள்ளைக்கு அளவே கிடையாது.
இஷ்டத்துக்கு கட்டண விலையை ஏற்றி கொள்ளையடிப்பதும் வழக்கமாகி விட்டது. அது மட்டுமின்றி கூடவே ஸ்பீடு பார்சல் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு மினி லாரி சரக்கை ஏற்றிச் செல்வதும், அதற்கு கட்டணத்தையும் தாறுமாறாக வசூலிப்பதும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அட்டகாசம் ஒரு பக்கம் என்றால், பேருந்து ஓட்டுநர்களும், ஊழியர்களும் மது போதையில் வாகனத்தை ஓட்டி பயணிகளை நடுநடுங்கச் செய்யும் அட்டூழியங்களும் அதிகமாகி விட்டது என்றே கூறலாம்.
இதற்கு ஒரு உதாரணம் என்றால், இந்த தீபாவளிக்கு முந்தின தினம், கோவையில் இருந்து தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பேருந்தில் அரங்கேறிய சம்பவம் தான். கோவை to தேவகோட்டை செல்லும் இந்த ஆம்னி பேருந்தில் கோவை, திருப்பூரில் இருந்து தினசரியும் மதுரை, காரைக்குடி, தேவகோட்டைக்கு என பலரும் பயணிக்கின்றனர். பயணிகளை விட ஸ்பீட் பார்சல் சர்வீசில் ஏகப்பட்ட பார்சல்களும் அனுப்பப்படுகின்றன.
கோவை, திருப்பூர் தொழில் நகரங்கள் என்பதால், லாரியில் ஏற்றுமளவுக்கு ஏராளமான பார்சல்கள் ஏற்றப்படுகின்றன. இந்த ஆம்னி பேருந்தில் ஒரு பக்கம் பயணிகளிடம் கட்டணக் கொள்ளை என்றால், பார்சல் சர்வீசில் பகிரங்க கொள்ளையே நடத்துகின்றனர்.


ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில்
போதை டிரைவர்கள்
பொதுவாக டிராவல்ஸ் என்ற பெயரில் ஆம்னி பேருந்துகள் தினசரி பயணிகளை ஏற்றி கோவை to தேவகோட்டை என ரூட் போட்டு செல்வதே சட்டப்படி தவறு. இதில் லாரியில் ஏற்றுவது சரக்குகளை ஏற்றி பார்சல் சர்வீஸ் நடத்துவதற்கும் அனுமதி கிடையாதுதான். ஆனால் அதிகாரிகள், அரசியல்வாதிகளை மாமூல் கொடுத்து கவனித்து விடுவதால் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் ஜாலியாக வலம் வருகின்றன.
இதில், கடந்த தீபாவளிக்கு முந்தின தினமான வெள்ளிக்கிழமை இரவு கோவையில் இருந்து தேவகோட்டை புறப்பட்ட ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தின் டிரைவர்கள் ஆரம்பத்திலேயே புல் மப்பில் தான் வண்டியை கிளப்பினர். அதிலும் டிரைவர் சீட் அருகிலேயே சரக்கு பாட்டில் இருந்ததைக் கண்டு, எப்படி உளர் போய்ச் சேரப் போகிறோமோ என பயணிகள் பீதியடைய ஆரம்பித்தனர்.
இதில் குடும்பத்துடன் பயணித்த ஒருவர், டிக்கெட் காசு போனாலும் பரவாயில்லை என உயிர் பயத்தில் கீழே இறங்கி ஓட்டம் பிடித்த கொடுமையை என்னவென்று சொல்வது? மற்ற பயணிகளோ தீபாவளிக்கு ஊர் போய்ச் சேர வேண்டுமே? என்ற கவலையில் திக் திக் பயத்தில் பயணித்தனர்.
இப்படி போதை டிரைவர்களால் பயணிகளின் உயிர்க்கு உத்தரவாதம் இல்லாத நிலையும், அனுப்பப்படும் பார்சல்களும் முறையாக சேர்க்கப்படாமல் அலைக்கழிப்பதும் ஆம்னி பேருந்துகளில் வாடிக்கையாகிப் போய்விட்டது. ஆர்கேடி டிராவல்ஸ் போன்ற ஆம்னி பேருந்துகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதோடு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





