இடி விழுந்ததால் தென்னை மரத்தில் பற்றிய தீ..!
கடலூர் அருகே இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது ராஜா வீட்டருகே இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ அணைந்தது. தீப்பிடித்ததில் தென்னை மரத்தின் கிளைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தென்னை மரத்தின் அருகில் இருந்த ராஜாவின் வீட்டில் இருந்த டிவி குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.







