செஞ்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவு?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பள்ளியை சேர்ந்த 414 மாணவிகள் உள்பட 624 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதால், அந்த பள்ளியில் மட்டும் வினாத்தாள் கசிந்திருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், தேர்வு நடைபெற்றபோது பள்ளியில் பணியில் இருந்த கல்வி அலுவலர்களிடம் விசாரணை நடத்தி எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, பள்ளியில் வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்றும், தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் குழந்தைராஜன் வேதியில் தேர்வு நடைபெற்ற நாளில் பள்ளியில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.





