18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடத் தடை..!
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணம்கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் விதமாக, புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, பணம்கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு என்பது, தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, ‘வெற்றிகளை’ ஈட்டுவதற்கான எதிர்பார்ப்புடன் பணத்தை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்டோரை பணம்கட்டி நடத்தப்படும் ஆன்லைன் விளையாட்டு விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், ஆன்லைன் விளையாட்டு விளையாடுவோரின் விவரங்களை அறியும் விதமாக அவர்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் வழங்குநர்கள், ஒரு நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடும்போது பாப்-அப் எச்சரிக்கைகளை கொடுக்க வேண்டும், வாடிக்கையாளர் டெபாசிட் செய்யும் போது, அவர்களது பண வரம்பு மற்றும் மொத்த செலவுகளைக் காண்பிக்கும் நினைவூட்டல் செய்தியை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களில் ‘ஆன்லைன் கேமிங்’ என்பது அடிமையாக்கும் என்பதை எச்சரிக்கை செய்தியாக காண்பிக்க வேண்டும் என்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.





