--- --:--:-- --

“ஆபாச வார்த்தைகளை சொல்லி மாணவியை தாக்கிய முதல்வர்”.. கொந்தளித்த நேரு கல்லூரி மாணவர்கள்!

xgsfdgs

துறையூர் அருகே, புத்தனாம்பட்டியில் உள்ள கல்லூரியில், மாணவியை தாக்கிய முதல்வரால் மாணவ- மாணவியர் கிளர்ந்தெழுந்துள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது, புத்தானாம்பட்டி. இங்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு நினைவு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. அதில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், ஏப்ரல் 21 வியாழக்கிழமை அன்று மதியம் நடந்த சம்பவம், கல்லூரியில் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது. அங்கு, மாணவ – மாணவியருக்கு வழக்கம் போல் உணவு இடைவெளிக்கு பின்னர், வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது.

 

அப்போது, அதே கல்லூரியில் படித்து வரும் முகம் தெரியாத இரண்டு மாணவர்கள் ஓடிவந்து, முதலாமாண்டு எம்.எஸ்.சி. படித்து வரும் ஜனனி என்ற மாணவி இருக்கும் வகுப்பறைக்குள் நுழைந்து உள்ளனர்.

 

மாணவர்கள் இருவர், தேவையின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததை, கல்லூரி முதல்வர் பெரியசாமி பார்த்துள்ளார். உடனடியாக அந்த மாணவர்களை பிடித்து அடித்து கண்டித்துள்ளார். அத்துடன் முதல்வர் பெரியசாமி இருக்கவில்லை.

 

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்த சம்பவத்துக்கு துளியும் தொடர்பில்லாத மாணவி ஜனனியை கூப்பிட்டு விசாரித்தார். திடீரென, காரணமின்றி அந்த மாணவியை அடித்ததாகவும், மற்ற மாணவிகள் முன், ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

முதல்வர் பெரியசாமி அடித்ததில் மாணவி ஜனனிக்கு காயம் ஏற்பட்டது. மனம் உளைச்சலில் இருந்த அவரை, சக மாணவர்கள் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனயில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பையும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

முதல்வர் பெரியசாமியின் செயல்பாட்டை கண்டித்து, கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனிடையே, நிலைமை விபரீதமடைவதை கண்டு பதற்றமடைந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தது.

 

அதன்பேரில், புலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்; போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், கலைந்துச் சென்றனர்.

 

அதேநேரத்தில் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தயங்க மாட்டோம் என மாணவ- மாணவியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், மாவட்டத்தில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


“நோட்டு புத்தகத்தால்
தலையில் ஓங்கி அடித்தார்!”

 

நேரு நினைவு கல்லூரி முதல்வர் பெரியசாமி, மாணவியை தாக்கிய விவகாரம், சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கும் சூழலில், பாதிக்கப்பட்ட மாணவி ஜனனியை சந்தித்தோம். என்ன நடந்தது என்று அவர் நம்மிடம் கூறியதாவது:

 

உணவு இடைவெளியின் போது நான் உட்கார்ந்து எழுந்தி கொண்டிருந்தேன். அப்போது வகுப்பறைக்குள் இரு மாணவர்கள் நுழைந்தனர். அதே நேரத்தில், கல்லூரி முதல்வரும் வகுப்பறைக்குள் வந்தார். மாணவர்கள் இருவரும் என்னுடன் பேசுவதாக நினைத்து, அவர்கள் இருவரையும் அடித்தார்.

 

பின்னர், என்னையும் அடித்தார். நோட்டு புத்தகத்தால் வேகமாக தலையில் 2- 3 முறை அடித்தார். எல்லா மாணவிகளையும், என்னையும் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார் என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.


Right Menu Icon