தமிழகத்தில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
இந்த தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று காலை தூத்துக்குடி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வின்பாஸ்ட் நிறுவனத்தை திறந்து வைத்து கார்களின் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் புதிய தொழில் தொடங்க 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றது. மின்சார வாகனங்கள் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு புதிய நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பாக இந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைகளுத்தாகின்றன என்பது குறிப்பிடதக்கது.





