தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழையும், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை, தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
31ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.





