மத்திய அமைச்சகம் சீனாவுக்கு வைத்துள்ள செக்..!
அரசு ஒப்பந்தங்களை பெற மத்திய அரசு வகுத்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளால் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தானியங்கி முறையில் ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதற்கு முன்னரே அன்னிய நேரடி முதலீட்டு வழியில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களை பெற வேண்டுமானால் புதிதாக பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புது வழி காட்டு நெறிமுறையால் சீனாவை சேர்ந்த செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ஜியோமி, ஒப்போ, தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிக்கும் ஹுவாவி மற்றும் ZTE மற்றும் மின் துறையை சேர்ந்த டாஃபேன் மற்றும் சைனா லைட் அன் பவர் போன்ற சீன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை கவர்மெண்ட் இ மர்கெட்பிளேஸ் எனப்படும் ஆன்லைன் பொது கொள்முதல் தளத்தில் விற்பனை செய்ய வேண்டுமானால் புதிதாக ஒப்புதல் மற்றும் பதிவு பெற வேண்டும். உள்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு இந்த ஒப்புதலை பெற வேண்டும் என்பதால் சீன நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.







