370வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகள் இன்று விசாரணை
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன், இன்று விசாரணைக்கு வரவுள்ளன.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தவு அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், அங்கு, துணை ராணுவப் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. பல பகுதிகளில், 144 தடை உத்தரவும், சில இடங்களில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, அங்கிருந்து வெளியாகும், ‘காஷ்மீர் டைம்ஸ்’ என்ற, ஆங்கில நாளிதழ் சார்பில், கடந்த, 6ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர், அனுராதா பாஷின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அனைத்து தொலை தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளால், செய்தியாளர்கள் முடக்கப்பட்டுள்ளனர். உடனடியாக, இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால், எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல், இங்கு, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பது, சட்டவிரோதமானது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.இதே போல, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சி சார்பிலும், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து, தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரச்னை இதைத்தவிர, மேலும் சிலரும், தனிப்பட்ட வகையில், இப்பிரச்னையில், வழக்கு தொடுத்துஉள்ளனர்.காங்.,கைச் சேர்ந்த, தஹ்சீன் புனேவாலா சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த, 13ம் தேதி, நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள்அமர்வு, இவ்வழக்கை விசாரித்தது.அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ‘ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த சிலருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகள்வருகின்றன. ஜம்மு – காஷ்மீரில், சட்டம் – ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதே, அரசின் முதல் இலக்கு. ‘அதனால் தான், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அங்கு, பெரிய அளவில் வன்முறையோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.அதைத் தொடர்ந்து, ‘ஜம்மு – காஷ்மீர் விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னை. அங்கு அமைதியை ஏற்படுத்துவது தான், மத்திய அரசின் முக்கியமான பணி.இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்’ எனக்கூறி,எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், பாப்டே, நசீர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகின்றன.





