“தீ”யாய் பற்றிக் கொண்ட உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு..! தயங்கும் அதிமுக, திமுக..!! டிசம்பருக்குள் சாத்தியமா..?
இதோ.. அதோ… என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளிடையே இன்னமும் நீடிக்கவே செய்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016 அக்டோபரில் முடிவடைந்தது. தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கலும் நடைபெற்று வந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் .அதுமுதல், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது. இதற்கு ஆளும் அதிமுகவில் நிலவி வந்த நிலையற்ற தன்மை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமா? என்ற சந்தேகம் நிலவியதும் ஒரு காரணம் என்றால், மாநில தேர்தல் ஆணையமும் ஏதேதோ சாக்குப் போக்கு கூறி தேர்தலை நடத்த அடுத்தடுத்து கால அவகாசமும் கோரி வந்ததும் மற்றொரு காரணம்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது; மத்திய அரசின் நிதியும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து தேர்தலை நடத்த நீதிமன்றங்கள் கெடு விதித்து கிடுக்கிப்பிடி போட்டன. மத்திய அரசுத் தரப்பிலும், தேர்தலை நடத்தினால் மட்டுமே நிதி ஒதுக்கீடு என்று கெடுபிடி காட்டப்பட்டது. எனவே நீதிமன்றங்களிலும் பல முறை வாய்தா மேல் வாய்தா வாங்கி வந்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றமும் இறுதிக் கெடு விதித்தது. இதனால் வேறு வழியின்றி கடந்த அக்டோபர் 31-ந் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவித்து விடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதிமொழி வழங்கியிருந்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை அனைத்து தரப்பினரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அக்டோபர் 31-ந் தேதிக்குள்ளும் தேர்தல் தேதியை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனது வரவில்லை. போதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் இல்லை. மகாராஷ்டிரா, அரியானா மாநில தேர்தலுக்காக எந்திரங்கள் அனுப்பப்பட்டதாக உப்புச் சப்பில்லாத ஒரு காரணத்தைக் கூறி, மேலும் 4 வார கால அவகாசம் வாங்கி விட்டது மாநில தேர்தல் ஆணையம் .

இந்நிலையில் தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் கிடைத்த அமோக வெற்றியால், ஆளும் அதிமுக தரப்பு பெரும் உற்சாகத்தில் திளைக்கிறது. முதல்வர் எடப்பாடியும் கட்சி தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவே நினைக்கத் தொடங்கி விட்டார். எனவே இதே சூட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி விடலாம் என்ற முடிவுக்கும் எடப்பாடி யார் வந்து விட்டதாக தெரிகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களிலும் அதிமுக தரப்பு சுறுசுறுப்புக் காட்டத் தொடங்கி விட்டது. தொடர்ந்து அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தையும் உற்சாகமாக நடத்தி முடித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின், உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னும் 15 தினங்களில் வெளியாகும் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனால் எப்படியும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற உறுதியான அறிகுறிகள் இப்போது தெரியத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
இதுவரை, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்தும் மாநில தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டது. அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றே ஆளும் அதிமுக தரப்பில் கூறப்பட்மு வந்தது. இப்போது து முதல்வர் ஓ.பி.எஸ், 15 நாட்களுக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருப்பதை எதிர்க்கட்சித் தரப்பில் வரவேற்றிருந்தாலும், கிண்டலாக விமர்சிக்கவும் செய்துள்ளனர். ஆக, தேர்தலை நடத்த இதுவரை முட்டுக்கட்டை போட்டு வந்தது அதிமுகதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.
ஆனாலும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அரசியல் கட்சிகள் பலவும், தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளில் மும்முரம் காட்டத் தொடங்கி விட்டன. இந்த உள்ளாட்சித் தேர்தலை அரசியல் கட்சிகளை விட, கிராம பஞ்சாயத்துகளில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர்கள் தான் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருந்தனர் என்றும் கூறலாம். ஏனெனில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கெல்லாம் அரசியல் கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவது வழக்கம். ஆனால், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு கட்சிச் சாயம் கிடையாது. சுயேட்சை சின்னங்களில் தான் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதனால் கிராமப் பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட நீண்ட நாட்களாக கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போதே தேர்தல் முஸ்தீபுகளில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டனர். தங்கள் ஆதரவாளர்களை தக்க வைக்க ஊர் எல்லைக் கோயில்களில் கிடா வெட்டி, விருந்து வைக்கத் தொடங்கி விட்டனர். தேர்தல் அறிவிப்பு வெளியான பின் இது போன்று விருந்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதால், கிராமங்கள் பலவற்றிலும் இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சாதிய ரீதியில் பலத்த போட்டி உருவாகும் என்பதால் பல கிராமங்களில் இப்போதே பரபரப்பும், பதற்றமும் பற்றிக் கொண்டது என்றும் கூறலாம்.

இதற்கிடையே டிசம்பருக்குள் தேர்தல் சாத்தியமா? என்ற சந்தேகத்தையும், தமிழக அரசியல் களத்தை நன்கு அலசி ஆராய்ந்தவர்கள் எழுப்பாமல் இல்லை. தற்போது ஆளும் அதிமுக அரசின் எஞ்சிய பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ளது. கட்சிக்குள் உட்பூசல் என்பது நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. அதிமுகவில் ஓ.பி.எஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், மேல்மட்டம் முதல் அடிமட்ட தொண்டன் வரையிலும் இந்த அணியினர் இன்னும் தனித்தே செயல்படுவதாக கூறப்படுகிறது. இடையில் டிடிவி தினகரனும் தன் பங்குக்கு உள்ளாட்சித் தேர்தலில் கெத்து காட்டத் தவற மாட்டார். இதனால் ஊர், ஊருக்கு அதிமுக கோஷ்டிப் பூசல் உச்சகட்டமாக தலையெடுக்கும். இது கட்சிக்கு தலை வலியாக அமைந்து தோல்வியில் முடியும் என அதிமுக மேலிடத்துக்கு தகவல் பறந்துள்ளதாம். மேலும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதும் அதிமுகவுக்கு பெரும் சிக்கலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இதனால் தேர்தலை சந்திப்பதில் அதிமுக மேலிடம் ஒரு வித தயக்கத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதே போன்றுதான், உள்ளாட்சி தேர்தலைத் தேர்தலை சந்திப்பதில் பிரதான எதிர்க கட்சியான திமுகவும் தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது தேர்தல் நடந்தால், அனைத்து தில்லாலங்கடி வேலைகளைக் காட்டி ஆளும் தரப்பே வெற்றியை தட்டிப் பறித்து விடும். எனவே சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வரை, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதே நல்லது என்ற எண்ண ஓட்டம் திமுக மேலிடத்துக்கும் உள்ளதாக தெரிகிறது.
இதனால், தேர்தல் டிசம்பர் இறுதிக்குள் நடைபெறுவது சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் ஒரு புறம் எழுந்துள்ளது. ஆனாலும், இன்னும் 15 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு தீயாய் பற்றிக் கொண்டுள்ளது என்பதே உண்மை.





