இன்றுடன் பரப்புரை நிறைவு..!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓயும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூரிலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் இறுதிக்கட்ட பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் சென்னையிலும் வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே திருவான்மியூரில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழலில், வாணியம்பாடியில் நேற்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே, இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதேபோல, திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான செய்திகளைப் பதிவிடக் கூடாது எனவும், குறுஞ்செய்தி, இணையம் உள்பட அனைத்து மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பதிவுகள் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் எந்த விதத்திலும் பரப்புரை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரப்புரைக்கான கட்டுப்பாட்டை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல, வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு வாகனங்களை பயன்படுத்துவது குற்றம் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இருவருடன் வேட்பாளர் அல்லது கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்கலாம் எனக் கூறியுள்ளது.





