கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டார் பாலிவுட் பாடகி கனிகா கபூர்..! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!!
கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், குணமான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த நிலையில், கடந்த மாதம் 15-ந் தேதி பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், மார்ச் 9-ந் தேதி லண்டன் சென்று திரும்பிய கனிகா கபூர், விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தாமல் தனது செல்வாக்கால் வெளியே வந்தவர் அதற்கடுத்த நாட்களில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் உ.பி.தலைநகர் பாட்னாவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் கனிகா கபூர் பங்கேற்றிருந்தார்.
இந்த விருந்தில் கனிகா கபூருடன், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசந்தர ராஜே சிந்தியா, அவருடைய மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த் மற்றும் உ.பி.மாநில அமைச்சர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த 3 நாட்களுக்குப் பின்னரே கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏனெனில் கனிகா கபூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிக்கள் பலரும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் பீதியடைந்தனர். அதிலும் பாஜக எம்.பி., துஷ்யந்த் அடுத்த இரு நாட்கள் மக்களவை நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனுடன் சந்திப்பு நடத்தியிருந்ததால் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் நிலவியது. இதனால் வசுந்தர ராஜே, துஷ்யந்த் மற்றும் மக்களவை எம்.பி.க்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்தனர்.
தொடர்ந்து, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் கனிகா கபூர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், லண்டன் சென்று வந்ததை மறைத்தது, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாதது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போன்ற குற்றங்களுக்காக கனிகா கபூர் மீது 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கனிகா கபூர் உடல் நலம் தேறி விட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும், கொரோணா பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டாரா என்பதற்காக அவரிடம் 6 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அனைத்து முடிவுகளும் நெகடிவ் என வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனாலும் வீட்டில் மேலும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கனிகா கபூருக்கு மருத்துவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.






