ஊரடங்கு எதிரொலி : மின்சார கட்டணம் செலுத்த மே 6-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே மாதம் 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கும் ஏப்ரல் 14-ந் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிவடைந்திருந்தாலும் மின் துண்டிப்பு செய்யப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டி ருந்தது.
மேலும்.மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படாததால் முந்தைய மாதத்திற்கான மின் கட்டணமே செலுத்த வேண்டும் எனவும், மின் உபயோகம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பின் பின்வரும் மாதங்களில் சரி செய்யப்படும் எனவும் தமிழக மின் வாரியம் அறிவித்திருந்தது.
தற்போது ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசமும் மே 6-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 30-ந் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அதற்கு முந்தைய மாதங்களின் கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவை மூலம் மின் கட்டணங்களைச் செலுத்தி, மின்கட்டண கவுண்ட்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.







