இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொன்ன சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சீருடை அணியாத சார்பு ஆய்வாளர் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொன்னதால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கமலமுத்து. இவர் அருகே உள்ள பூதமங்கலம் பகுதிக்கு வழக்கு விசாரணைக்காக சீருடை அணியாமல் சென்றிருந்தார்.
அப்போது பொதுமுடக்க உத்தரவை மீறி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேரை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொல்லியுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் கமலமுத்துவை மதுரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.







