--- --:--:-- --
fhdhdh

மிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும் சேகர்பாபு மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைத்துள்ளார். தனது பிடிவாதத்தால் அதிமுகவுக்குள் ஒபிஎஸ்-ஐ இணைக்க மறுத்த எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக கரைந்து வருவதாக, அக்கட்சியினர் வேதனையை தெரிவித்துள்ளனர்.

 

பிப்ரவரி 27, சென்னை அண்ணா அறிவாலயம் ஒரு போர்க்களத்தின் பரபரப்போடும், ஒரு பெரும் மாற்றத்தின் அதிர்வோடும் காட்சியளித்தது. வழக்கமாக வரும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை விட அன்று கூடுதல் பரபரப்புடன் அறிவாலயம் இருந்தது. சீனியர் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வாசலிலேயே காத்திருந்தது எதற்காக? தமிழக வரலாற்றில் மூன்று முறை முதல்வராக இருந்த ஒருவரை, திராவிட முன்னேற்றக் கழகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற அந்த தருணம், எடப்பாடி பழனிசாமிக்கு விடப்பட்ட நேரடி சவால்.

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் தன் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஐயப்பனுடன் இணைந்தபோது, தமிழக அரசியலின் ஒரு சகாப்தம் திசை மாறியது. ஸ்டாலின் ஓபிஎஸ்ஸை ஆரத்தழுவிய அந்த வினாடி, வெறும் அரசியல் சந்திப்பல்ல; அது எடப்பாடியின் ஒற்றைத் தலைமை பிடிவாதத்திற்கு விழுந்த மரண அடி. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருகே நின்று புன்னகைக்க, ஓபிஎஸ்ஸின் முகத்தில் தென்பட்ட அந்த நிம்மதி, கடந்த சில ஆண்டுகால அவமானங்களுக்குக் கிடைத்த மருந்தாகவே பார்க்கப்பட்டது.

எடப்பாடியின் ஆணவத்துக்கு சம்மட்டி அடி!

 

“கட்சியை அரவணைத்துச் செல்லத் தெரியாதவர் தலைமைப் பண்புக்கு தகுதியற்றவர்” என்று ஓபிஎஸ் உதிர்த்த வார்த்தைகள், எடப்பாடியின் ஈகோவை நோக்கி எறியப்பட்ட ஈட்டிகள். அதிமுகவை தனது பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்த எடப்பாடிக்கு, இப்போது கட்சி ஒவ்வொரு பக்கமாக கசிந்து கொண்டிருப்பது புரியத் தொடங்கியிருக்கும்.

 

எடப்பாடியின் பிடிவாதத்தால் ஏற்கனவே மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் திமுக கரைக்கு ஒதுங்கினர். மீதமிருந்த மிச்ச சொச்ச நம்பிக்கையையும் எடப்பாடியின் “யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன்” என்ற ஆணவப் போக்கு தின்று தீர்த்துவிட்டது. “எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார்” என ஓபிஎஸ் வெடித்தது, அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் மனக்குமுறலின் எதிரொலிதான். தன்னை ஒரு ‘சுப்ரீம் பவர்’ என்று நினைத்துக் கொண்ட எடப்பாடி, இப்போது சொந்தக் கட்சியையே உருக்குலைய விட்டுவிட்டுத் தனித்து நிற்கிறார்.

 

அன்று தர்மயுத்தம்… இன்று ‘அறிவாலய’ பக்கம்!

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம் சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தியானம் செய்தார், தர்மயுத்தம் நடத்தினார், மீண்டும் இணைந்தார், துணை முதல்வரானார். ஆனால், எடப்பாடி பழனிசாமி விரித்த அதிகார வலையில் சிக்கி, சசிகலாவையும் இழந்து, கட்சியையும் இழந்து நடுத்தெருவில் நின்றார். டெல்லி வரை சென்று அமித்ஷாவிடம் முறையிட்டும், எடப்பாடியின் பிடிவாதம் தளரவில்லை.

 

“நான் ஒருபோதும் திமுகவை தீய சக்தி என்று சொன்னதே இல்லை” – இதுதான் ஓபிஎஸ்ஸின் தற்போதைய ‘பன்ச்’. இந்த ஒரு வரியிலேயே எடப்பாடியின் அரசியலை மொத்தமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டார். கடந்த ஐந்தாண்டு கால ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை அடுக்கிய ஓபிஎஸ், “மக்களின் மனநிலை மீண்டும் திமுகதான்” என்று அடித்துச் சொல்லியிருப்பது, வரும் தேர்தலில் அதிமுகவுக்குத் தார்மீக ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சேகர்பாபுவின் ‘ஸ்கெட்ச்’- காலியாகும் அதிமுக!

 

இந்த மெகா ஆபரேஷனுக்குப் பின்னால் அமைச்சர் சேகர்பாபுவின் தேர்தல் வியூகம் கச்சிதமாகச் செயல்பட்டிருக்கிறது. ஓபிஎஸ்ஸின் கோட்டையான தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாகச் சரிக்கும் வேலையை திமுக செவ்வனே முடித்திருக்கிறது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளிட்டவர்களின் வரவு, தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு இருந்த சொற்ப செல்வாக்கையும் காலி செய்துள்ளது.

 

அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது என்பதை எடப்பாடி உணர மறுக்கிறார். அல்லது உணர்ந்தும் ஆணவம் அவரைத் தடுக்கிறது. “அனைவரையும் அரவணைக்காத தலைமை அழியும்” என்ற அரசியல் பாலபாடத்தை ஓபிஎஸ் இன்று அவருக்குப் புகட்டியிருக்கிறார். அறிவாலயத்தின் வாயிலில் ஓபிஎஸ்ஸுக்குக் கிடைத்த அந்த முக்கியத்துவம், எடப்பாடிக்குத் தரப்பட்ட எச்சரிக்கை மணி.

 

2026-ன் புதிய கணக்கு: எஞ்சியிருப்பது என்ன?

 

தமிழக அரசியல் களம் எத்தனையோ ‘கிளைமாக்ஸ்’களைக் கண்டிருக்கிறது. ஆனால், 2026 தேர்தலுக்கு முன்பாக அறிவாலயத்தில் அரங்கேறியிருக்கும் இந்த ‘மெகா ட்விஸ்ட்’ இருக்கிறதே… அது எடப்பாடியின் தூக்கத்தைக் கலைத்திருப்பது மட்டுமல்ல, அதிமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

 

“அம்மா விஸ்வாசி” என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இப்போது “தளபதியின் தளபதி”யாக உருவெடுத்திருக்கிறார். காலத்தின் சக்கரம் சுழன்ற வேகத்தில், பன்னீரின் கைகளில் இப்போது உதயசூரியன் ஒளிர்கிறது.

 

அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என வரிசையாக அறிவாலயம் நோக்கிப் படையெடுப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய துருவமுனைப்பை உருவாக்கியுள்ளது. “தளபதி வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்” என்று ஓபிஎஸ் இறங்கி வந்திருப்பது, திமுகவின் பலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

 

சுருங்கும் அதிமுக; நொறுங்கும் தொண்டர்கள்!

 

எம்ஜியார் தோற்றுவித்த கட்சி, ஜெயலலிதா வளர்த்த இயக்கம்… இன்று எடப்பாடியின் ‘கொங்கு’ பாசத்தால் ஒரு குறிப்பிட்ட சாதிச் சங்கமாக சுருங்கிப் போய் கிடப்பதுதான் அதிமுக தொண்டர்களின் ஆகப்பெரும் வேதனை.

 

வேலுமணி, தங்கமணி என ‘மணி’ அடிக்கும் சீனியர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, தென் மாவட்டத்து ‘ரத்தத்தின் ரத்தங்களை’ எடப்பாடி ஓரங்கட்டியதன் விளைவுதான் இன்று அறிவாலயம் நோக்கி நடக்கும் ஓபிஎஸ்-ன் அணிவகுப்பு.

 

சாதியப் பிடிவாதத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கட்சியாக இருந்த அதிமுகவை, ஒரு குறிப்பிட்ட வட்டாரக் கட்சியாக மாற்றிய எடப்பாடியின் ‘ஆணவ அரசியலை’ பார்த்து அடிமட்டத் தொண்டர்கள் குமுறுகிறார்கள். சாதி பாசம் ஒருகட்டத்தில் சவக்குழியாக மாறும் என்பதை எடப்பாடி உணரப்போவது எப்போது?

 

எடப்பாடி பழனிசாமி இன்னும் தன் பிடிவாதத்தை விடாமல் “நாங்கள் தான் உண்மையான அதிமுக” என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், தர்மயுத்தம் தொடங்கிய அதே ஓபிஎஸ், இன்று அறிவாலயத்தில் அமர்ந்து அதிமுகவின் அழிவைப் பற்றிப் பேசுவது, எடப்பாடியின் அரசியல் அஸ்தமனத்தின் தொடக்கமோ என்ற கேள்வியைத் தமிழக மக்கள் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

 

மொத்தத்தில், அறிவாலயம் அதிமுகவின் ‘முதல்வர்களை’ வளைத்துக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆணவத்தையே துணையாகக் கொண்டு காலியான கூடாரத்தில் அமர்ந்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon