--- --:--:-- --

திமுகவை குறிவைக்கும் மோடி, அமித்ஷா! பிரசார உத்தி மாற்றிய பாஜக தலைவர்கள்!!

amith sha

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சமீபத்திய தமிழக தேர்தல் பிரசாரத்தில், திமுகவை கடுமையாக தாக்கி பேசி, பரபரப்பை ஏற்படுத்தினர். இது திமுக தலைவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அத்துடன், பிரசார முறைகளிலும் வேகம் தெரிகிறது. குறிப்பாக, பாஜக தலைவர்களின் பிரசாரத்தில் திமுக தலைவர்களை குறித்து வைத்து தாக்கி, கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர். பொதுவாக பாஜக தலைவர்களின் பிரசார உரைகளில் ஆளுங்கட்சி சாதனைகளை பட்டியலிட்டு பேசுவதே வழக்கமாக உள்ளது; அல்லது காங்கிரஸ் தலைமை விமர்சனம் செய்வார்கள்.

 

ஆனால், இம்முறை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பிரசார பேச்சுகள், திமுக தலைமையை வெளுத்து வாங்கும் வகையில் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 ம் தேதி புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். வழக்கமான மென்மையான அணுகுமுறைக்கு மாறாக, இம்முறை பிரதமர் மோடியின் பேச்சில் காரம் தெரிந்தது. பிரதமர் மோடி, திமுக தலைவர்களை பேச்சால் வறுத்தெடுத்தார்.

 

மோடி தனது பேச்சில், “திமுக ஆட்சி என்றாலே, மாவட்டம்தோறும் ரவுடியிசம் பெருகும் என்பது மக்களுக்கு தெரியும். சமூக விரோதிகளின் கொட்டம் தலைதூக்கிவிடும்” என்று காட்டமாக தாக்கிய மோடி, திமுகவும் காங்கிரசும் ஊழலில் ஊறித்திளைத்த கட்சிகள். ஊழல் செய்வதற்காகவே திமுக தனது மூளையை பயன்படுத்துகிறது. தங்களின் சட்டை பையை மட்டுமே நிரப்பிக் கொள்ளவே திமுகவும், காங்கிரசும் நினைக்கின்றன என்று விளாசித் தள்ளினார்.

 

பிரதமர் மோடிதான் இப்படி திமுகவினரை அடித்து துவைத்தார் என்றால், அடுத்ததாக தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்னும் ஒருபடி மேலே போய், திமுக தலைவர்களை கடுமையாக சாடினார். விழுப்புரத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணி தங்களது குடும்பத்தை மட்டுமே நினைத்து செயல்படுகின்றன. அவர்கள் தமிழக மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை; திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக துடிக்கிறார் என்று அமித்ஷா குத்தலாக பேசினார்.

 

அமித்ஷா மேலும் பேசும்போது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க இப்போது ராகுல் தமிழகம் வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருந்தபோதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது என்பதை அவர் மறந்துவிட்டாரா? அப்போது காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் திமுகவும் இருந்து கொண்டு என்ன செய்தது” என்று சரமாரியாக கேட்டார். தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது என அமித்ஷா சொல்லி முடிக்க, அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.

 

2ஜி 3ஜி 4ஜி என அனைத்துமே தமிழகத்தில் உள்ளது. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று 3 தலைமுறை. 4 ஜி என்றால் நேரு, இந்திரா, சோனியா, ராகுல் என்று நான்கு தலைமுறை என்று அமித்ஷா, திமுகவையும் காங்கிரஸையும் வெளுத்து வாங்கினார். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் திமுக மீதான இத்தகைய திடீர் தாக்குதலை, அக்கட்சி தலைவர்களே எதிர்பார்க்கவில்லை. இது, திமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் திமுக பதிலடி தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Right Menu Icon