விருப்பமனு அளித்த திமுகவினரிடம் விறுவிறுப்பாக தொடங்கியது நேர்காணல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினருக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலையத்தில் இன்று காலை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்கி, மார்ச் 19ம் ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை, மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
திமுக சார்பில், 2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் இன்று (02-03-2021) முதல், வரும் 6ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளதாக, திமுக தலைமை அறிவித்திருந்தது. இதில், மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க. சார்பில் சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல், பிப்ரவரி 28 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களமிறங்க மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். மொத்தம் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டதில், 7 ஆயிரத்து 967 மனுக்கள் தாக்கலானதாக, திமுக தலைமை தெரிவித்தது.
இச்சூழலில், விருப்பமனு அளித்த திமுகவினரிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று காலை தொடங்கியது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று, மனு அளித்தவர்களிடம் கலந்தாய்வு செய்து வருகின்றனர்.
முதல் நாளான இன்று, காலையில் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) தூத்துக்குடி (வடக்கு, மேற்கு), திருநெல்வேலி (கிழக்கு, மத்திய), தென்காசி (வடக்கு, தெற்கு), ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகலில் விருதுநகர் (வடக்கு, தெற்கு), சிவகங்கை, தேனி (வடக்கு, தெற்கு), திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




