8,241 பேர் விருப்பமனு தாக்கல்! நாளையே நேர்காணல்… அதிமுக ’சுறுசுறுப்பு’!!
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறுவது இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், 8,241 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நாளையே நடைபெறுகிறது.
தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. விருப்பமனு வழங்குவதற்கு கடைசி நாளாக, மார்ச் 6ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடுதிடுப்பென தேர்தல் அறிவிக்கப்பட்டதால், உரிய கால அவகாசம் இல்லாததை கருத்தில் கொண்டு, மார்ச் 3ஆம் தேதி (இன்று) என்று மாற்றப்பட்டது.
இந்நிலையில், விருப்பமனு அளிப்பதற்கு கடைசி நாளான இன்று காலையில் இருந்தே, அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் கூட்டம் அலைமோதியது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் திரும்பிய பக்கம் எல்லாம் அதிமுக கரைவேட்டியுடன் கட்சியினராகவே இருந்தனர். ஒவ்வொரு தலைவர்களின் ஆதரவாளர்களும் விருப்ப மனுக்களை கொடுத்து வந்தனர்.
இன்று மாலை மாலை 5 மணியுடன் விருப்பமனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நெருங்குவதால் கட்சி ரீதியான அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஒரேகட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது.
தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து வேலைகளையும் மின்னல் வேகத்தில் முடித்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.





