செப்.18 முதல் அமெரிக்க கிரீன் கார்டு விதிகளில் கூடுதல் மாற்றம்..!
அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமைக்கு (Lawful Permanent Residence) விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், எதிர்காலத்தில் அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்திருக்கும் ‘பப்ளிக் சார்ஜ்’ நபராக மாறுவார்களா என்பதைத் தீர்மானிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) வெளியிட்டுள்ளது. பைடன் நிர்வாகத்தின் விதிமுறைகளை மாற்றி, டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழலையும் தனித்தனியாக விரிவாக ஆய்வு செய்ய வழிவகை செய்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சுயசார்புடன் இருக்க வேண்டும்; வரி செலுத்துவோரின் நிதியில் இயங்கும் அரசின் நலத்திட்ட உதவிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்ற நாடாளுமன்றத்தின் நோக்கத்திற்கு ஏற்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பால் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் வரும் செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வருகின்றன. பப்ளிக் சார்ஜ் வரம்பிற்குள் வரும் பிரிவுகளின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
செப்.18 முதல் என்னென்ன மாற்றங்கள் அமலாகின்றன? உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) 2022-ஆம் ஆண்டு கொண்டுவந்த பப்ளிக் சார்ஜ் விதிமுறைகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த புதிய கொள்கை வழிகாட்டுதலை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. போதிய நிதி ஆதரவு உறுதிமொழி ஆவணம் (Affidavit of Support) இல்லாததைத் தவிர, வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் ஒரு விண்ணப்பதாரரைப் பப்ளிக் சார்ஜ் ஆகத் தீர்மானிக்காது. இருப்பினும், செப்டம்பர் 18 முதல் பின்வரும் அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வாழ்வாதாரப் பராமரிப்புக்கான நேரடிப் பண உதவி, வீட்டு வசதி உதவி, உணவு முத்திரைகள் (Food Stamps), கல்லூரிப் படிப்புக்கான நிதியுதவி அல்லது பிற நலத்திட்ட உதவிகளைப் பெறுவது பப்ளிக் சார்ஜ் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படலாம். வருமான வரம்பிற்கு உட்பட்ட இத்தகைய அரசு உதவிகளுக்கு விண்ணப்பிப்பது, ஒப்புதல் பெறுவது அல்லது சான்றிதழ் பெறுவதும் கூட பப்ளிக் சார்ஜ் ஆகக் கருதப்படலாம்.
விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளைத் தவிர்த்து, அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தைப் பெற விண்ணப்பிக்கும் அனைவரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




