பறக்கும் படையா? பறிக்கும் படையா? *தேர்தல் கமிஷனின் ‘பகீர்’ கெடுபிடிகள்! *பணம் இழந்து கதறும் சாமானியர்கள்!
தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தகிக்கத் தொடங்கிவிட்டது. வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை, கூட்டணிப் பேச்சுவார்த்தை என அரசியல் களம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் ‘பறக்கும் படை’ என்கிற பெயரில் பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
“வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கிறோம்” என்ற கோதாவில் களம் இறங்கியிருக்கும் இந்த டீம்கள், நிஜமாகவே திமிங்கிலங்களை வளைக்கிறார்களா அல்லது கெண்டை மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!
சாமான்யனின் பாக்கெட்டில் கை வைக்கலாமா?
“மகளுக்கு ஆபரேஷன் செய்ய அஞ்சு லட்சத்தை நகையை அடகு வெச்சு எடுத்துட்டு வந்தேன் சார்… இப்படிப் புடிச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவேன்?” – இது ஒரு ஏழைத் தந்தையின் கதறல். “காய்கறி மார்க்கெட்டுக்கு மூட்டைகளை எடுக்கப் பணம் கொண்டு போனேன், எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க” – இது ஒரு சிறுகுறு வியாபாரியின் வேதனை.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் அது பறிமுதல் செய்யப்படும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அவசரத் தேவைக்குக் கூடப் பற்றாத தொகை. மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம், விவசாயத் தேவை எனப் பணத்தை எடுத்துச் செல்லும் அப்பாவிகள், ஆவணங்கள் சரியாக இல்லை என்ற ஒற்றைக் காரணத்துக்காக நடுரோட்டில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுகிறார்கள்.
ஏட்டளவில் பறக்கும் படையின் பணிகள்?
உண்மையில் பறக்கும் படையினரின் (Flying Squads) வேலை என்ன? தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மெஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீடியோகிராஃபர் அடங்கிய இந்த டீம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
வாக்காளர்களுக்குப் பணம், மது, பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுப்பதுதான் இவர்களின் முதன்மை நோக்கம். ஆனால், கள நிலவரம் வேறாக இருக்கிறது. “அரசியல்வாதிகளின் கார்கள், கட்சி கொடி கட்டிய வாகனங்கள், ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார்களைப் பார்த்தால் இந்த சிங்கம் படப் போலீஸார் அப்படியே சல்யூட் அடித்து அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால், “டூவீலரில் போகும் டிப்டாப் ஆசாமியையும், பழைய வண்டியில் வரும் வியாபாரியையும் மறித்து டார்ச்சர் செய்கிறார்கள்” எனப் புகார்கள் அடுக்கடுக்காக எழுகின்றன. தேர்தல் ஆணையத்தின் சோதனை உண்மையில் நல்ல நோக்கத்துக்கானது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஏதுமறியாத அப்பாவிகளும் அதில் பலி கடா ஆகிறார்கள் என்பதுதான் சோகம்.
திருப்பூர் ‘பகீர்’ செக்-போஸ்ட்!
கடந்த இரண்டு தினங்களாகத் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய வேட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ளது. குறிப்பாக, பனியன் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் அதிரடி கிளப்பியுள்ளனர்.
அவினாசி, பல்லடம், காங்கேயம் மற்றும் திருப்பூர் வடக்கு ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் பறந்து பறந்து நடத்திய சோதனையில் சுமார் 41.73 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 1.26 கோடி ரூபாய்க்கு மேல் பிடிபட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த ‘விசில்’ மற்றும் பரிசுப் பொருட்களும் சிக்கியுள்ளன.
ஆனால், இந்தத் தொகையில் எத்தனை ‘அரசியல் பணம்’ என்பதுதான் சந்தேகமே. பிடிபட்ட பெரும்பாலானவர்கள் சாதாரண வியாபாரிகளும், நிலம் விற்றுப் பணத்துடன் வந்த பொதுமக்களுமே என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
கண்ணில் மண்ணை தூவிய கட்சிகள்!
“கிளைச் செயலாளர் வரைக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னாடியே பணத்தைப் பெட்டி பெட்டியா கொண்டு போய் சேர்த்துட்டாங்கப்பா…” என டீக்கடைகளில் பேசப்படும் ரகசியம் ஊரறிந்த உண்மை. தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தங்களது ‘லாஜிஸ்டிக்ஸ்’ வேலைகளைக் கச்சிதமாக முடித்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.
அப்படி இருக்கும்போது, இப்போது பறக்கும் படை செய்யும் சோதனைகள் எல்லாம் வெறும் கண் துடைப்புதான் என்ற கருத்தும் உள்ளது. குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதைப் போல, பணம் முழுவதும் உரிய இடங்களுக்குச் சென்றடைந்த பிறகு, இப்போது சாலையில் செல்லும் வண்டிகளை மறித்துப் பார்ப்பது “வேலையில்லாத வேலை” என ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். “யானை போன தடம் தெரியல, பூனை போன தடம் தேடுறாங்களாம்” என்கிற பழமொழிதான் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
“கையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல 50 ஆயிரம் ரூபாய் லிமிட் என்பது 15 ஆண்டுகளுக்கு முன்னால் போட்ட சட்டம். இன்றைய பணவீக்கத்துக்கு இது சாத்தியமே இல்லை. குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
“மக்களாட்சி என்பது மக்களுக்காக… மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல!” ஒரு குடிமகன் தன் சொந்தப் பணத்தை எடுத்துச் செல்லவே பயப்படும் சூழல் ஒரு ஜனநாயக நாட்டில் நிலவுவது ஆரோக்கியமானதல்ல.
தேர்தல் ஆணையம் உண்மையிலேயே நேர்மையாகத் தேர்தல் நடத்த விரும்பினால், பணப்பட்டுவாடா செய்யும் ‘பெரிய தலைகளை’ வளைக்க வேண்டும். அதை விடுத்து, கருவூல வாசலில் தன் சொந்தப் பணத்தை மீட்க அப்பாவிகளைப் போராட விடுவது நியாயமா? நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக தேர்தல் ஆணைய சட்டங்களை திருத்த, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பறக்கும் படைகள் உண்மையிலேயே ‘பறக்கும்’ படையாக இருக்க வேண்டும், அதே சமயம் அப்பாவிகளைக் காக்கும் ‘காக்கும்’ படையாகவும் இருக்க வேண்டும். அதுவரை சாமான்யனின் பாடு படு திண்டாட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.






