--- --:--:-- --

தனிப்பாதையில் தளபதி! * பாஜக ஏமாற்றம்; திமுகவுக்கு ஏற்றம்..* விஜய் மீதான பிடியை இறுக்கும் சிபிஐ!

gjfgjfj

தமிழக அரசியலில் கோடைக்கால வெப்பத்தை விட, தேர்தல் களம் தற்போதே தகிப்பைக் கூட்டத் தொடங்கிவிட்டது. “யாரோடும் சமரசம் இல்லை; தனித்தே களம் காண்போம்” என்கிற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு, கோட்டையை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் கணக்குகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

 

மார்ச் 18 அன்று மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடந்த இப்தார் நோன்புத் திறப்பு நிகழ்வில், குல்லாய் அணிந்து கஞ்சி குடித்த கையோடு விஜய் வீசிய அரசியல் ஏவுகணை, டெல்லி முதல் அறிவாலயம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

அமித் ஷாவின் ஆபரேஷன் ஃபெயிலியர்!

 

தமிழகத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ‘மெகா கூட்டணி’ அமைத்து ஸ்டாலினுக்கு செக் வைக்க நினைத்த பாஜகவின் வியூகம் தற்போது தவிடுபொடியாகி இருக்கிறது. தவெக-வை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லி மேலிடம் விரித்த வலை மிக நீளமானது.

 

50 தொகுதிகள், கௌரவமான துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. ஆனால், ஆரம்பத்திலிருந்தே “மதச்சார்பற்ற சமூக நீதி” என்கிற தனது கொள்கைப் பாதையில் உறுதியாக இருந்த விஜய், காவித் தரப்பின் எந்தவொரு சமரசப் பேச்சுவார்த்தைக்கும் பிடிகொடுக்கவில்லை.

 

விஜய்யை வளைக்க அவரது நெருங்கிய நண்பரான ஒரு தொழிலதிபர் மூலமாகக்கூட தூது அனுப்பப்பட்டது. “கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே ரிஸ்க் எடுக்க வேண்டாம், கூட்டணி பலத்தோடு களம் இறங்கலாம்” என்கிற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆனால், “கொள்கை எதிரி என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பின்வாசல் வழியாக எப்படி கரம் கோர்ப்பது?” என்கிற விஜய்யின் தார்மீகக் கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை. இந்த ‘மிஷன் ஃபெயிலியர்’ காரணமாக அமித் ஷா கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. ‘பதவிக்காகப் பணியாத’ விஜய்யின் இந்தத் தனி ஆவணம், டெல்லி சுல்தான்களைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

 

கரூரில் தொடங்கிய கார்னர் அரசியல்!

 

அரசியலில் ‘பதவி’ பலிக்காதபோது ‘பயம்’ காட்டும் உத்தி காலம் காலமாக நடப்பதுதான். விஜய்யின் பிடிவாதமான முடிவைத் தொடர்ந்து, அவர் மீதான சட்ட ரீதியான பிடிகள் இறுகத் தொடங்கிவிட்டன. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தை தற்போது சிபிஐ கையில் எடுத்திருப்பது தற்செயலானது அல்ல என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த விவகாரத்தில் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படச் சிக்கலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. திரைப்பட ஷூட்டிங்கிற்காகவே செயற்கையாகக் கூட்டத்தைக் கூட்டி, மக்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டினார் விஜய் என்கிற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைவைத்து அவரை சிபியை ‘கார்னர்’ செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

 

“மக்களைத் திரையரங்கு வாசலில் பார்த்தது போல, அரசியல் களத்திலும் வெறும் காட்சிப் பொருளாகப் பார்க்கிறார்” என்கிற பிம்பத்தை உருவாக்க ஏஜென்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், “நாம அரசியலுக்கு வந்ததுல இருந்தே நம்மைப் பத்தி வதந்திகள் பரப்புறாங்க” என இப்தார் மேடையிலேயே விஜய் இதற்குப் பதிலடி கொடுத்துவிட்டார். அடக்குமுறைகள் மூலமாகத் தன்னை முடக்க நினைப்பவர்களுக்கு, “வெற்றி நிச்சயம்” என்கிற ஒற்றை வரியில் சவால் விடுத்திருக்கிறார் தமிழகத்தின் ‘இளைய தளபதி’.

 

திமுக குஷி: எடப்பாடி நிம்மதி!

 

விஜய்யின் தனித்துப் போட்டி அறிவிப்பு அறிவாலயத்தில் பட்டாசுகளை வெடிக்கச் செய்திருக்கிறது. பொதுவாக, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறினால் அது அந்த கட்சிக்கே சாதகமாகும். ஒருவேளை அதிமுக – தவெக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அது திமுகவுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும். இப்போது களம் நான்கு முனைப் போட்டியாக மாறியிருப்பதால், எதிர்ப்பு வாக்குகள் நான்காகப் பிரியும் என்பதும், அதன் மூலம் தங்களுக்கு வெற்றி எளிதாகும் என்பதும் திமுகவின் கணக்கு. “பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக” உடன்பிறப்புகள் உற்சாகத் துள்ளலில் உள்ளனர்.

மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருவித நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே உடன்பாடில்லை. ஒருவேளை கூட்டணி அமைந்தால், கட்சியின் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் விஜய்க்கும் அவருக்கும் இடையே பெரும் மல்லுக்கட்டு நடந்திருக்கும். இப்போது “வம்பே வேண்டாம்” என விஜய் விலகி நின்றது, எடப்பாடிக்குத் தனது சொந்த செல்வாக்கை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

 

கொள்கைச் சமரசம் இல்லா போர்!

 

விஜய்யின் இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு புதிய பரிணாமத்தைக் காட்டியுள்ளது. சிறுபான்மையின வாக்குகளைத் தக்கவைக்க வேண்டும் என்கிற தெளிவும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவரிடம் தெரிகிறது. “எப்பவுமே சமரசம் வெச்சுக்க மாட்டோம்” என்கிற அவரது பேச்சு, வெறும் தேர்தல் வாசகம் மட்டுமல்ல, அது ஒரு நீண்ட காலப் பயணத்திற்கான அடித்தளம்.

 

கார்னர் செய்யும் சிபிஐ, பாஜக அரசின் அழுத்தம், பண பலத்தில் திமுக எனப் பல முனைகளில் இருந்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், விஜய் தனது ‘மக்களுடைய டீம்’ என்கிற முழக்கத்தோடு ஏப்ரல் 23 தேதியை நோக்கி நகர்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இந்தப் பிடிவாதம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுமா அல்லது தந்திரங்களுக்குப் பலியாகுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்

Leave a Reply

Right Menu Icon