கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு..!
சென்னை அடையாற்றின் கரையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தரையின் கீழ் தளத்தில் தரை பாலத்தில் தலையில் பலத்த காயத்துடன் 17 வயது சிறுவன் சடலமாக கிடந்தான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து கிடந்த 17 வயது சிறுவன் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் என்பதும் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்பதும் தெரிய வந்தது.
அடையாறு பாலத்தின் கீழே நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைப்பதை சிறுவன் வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் கஞ்சா போதையில் உடன் பழகிய நண்பர்களே கொலை செய்தார்களா என்று சந்தேகம் எழுந்ததால் உயிரிழந்த சிறுவனின் நண்பர்கள் ஆறு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





