இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்
தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள்.
போராட்ட காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கூறி உள்ளார்.





