சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை..!
முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறையின் மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேச உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, விசாரணை கைதிகள் மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளனர்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. இவை தவிர சில சட்ட முன்வடிவுகளை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தரை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை அமைச்சர் சுப்பிரமணியன் தாக்கல் செய்ய இருக்கிறார்.





