தேநீர் அருந்த ரயிலை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்.!
பீகாரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்தி ஓட்டுநர் தேநீர் வாங்கி அருந்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்ற போது அதன் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.
அந்த ரயில் கடப்பதற்காக அங்கிருந்த லெவல் கிராசிங் மூடப்பட்டிருந்ததால் வாகனங்கள் அங்கு காத்திருந்தன. அப்பொழுது ரயிலுக்கான உதவி ஓட்டுநர் அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று தேநீர் வாங்கி வந்து கொடுக்க ரயில் ஓட்டுனர் அதை அருந்தினார்.
இதனை பார்த்து லெவல் கிராசிங்கில் காத்திருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். லெவல் கிராசிங் மூடப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது. தேநீர் அருந்துவதற்காக ரயில் நடுவழியில் நிறுத்திய நிகழ்வு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





