புதுக்கோட்டையில் சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை..!
புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலை பட்டியில் காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.
அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறும் துப்பாக்கி குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அவ்வப்போது விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி அரையாண்டு விடுமுறையில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவன் உணவருந்தி கொண்டிருந்தபொழுது வீட்டின் கூரையை துளைத்துக்கொண்டு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கியை குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தால் கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.





