ஆன் லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான தீர்ப்பில் தமிழக அரசு மேல்முறையீடு..!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
முறைப்படுத்துதல் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனவும் உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






