ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று கூறி சாலை மறியல்: ராசிபுரத்தில் 5 பேர் கைது
தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று ஆவேசமடைந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல், நாளை ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, இடைவெளியின்றி மாலை 7 மணிக்கு நிறைவடைகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுபுறம் இருக்க, சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆளுங்கட்சியினர் சிலருக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளதாக தகவல் கசிந்தது. ஆனால், அதே பகுதியை சேர்ந்த தங்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தரவில்லை என்று ஆவேசமடைந்த அப்பகுதியினர் சிலர், சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பணம் வழங்கினால், முறையாக எல்லோருக்கும் வழங்க வேண்டும்; இதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பொதுமக்களை கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர். எனினும் ஒருசிலர் அங்கேயே தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஓட்டுக்கு பணம் வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டு பொதுமக்கள் மறியல் செய்த சம்பவம் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.





