கமலுக்காக விட்டுத்தந்தேன்… மனுதாக்கல் செய்த பின் நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி
நடிகர் கமல்ஹாசனுக்காக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்று, தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில், நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். கடுமையாக களப்பணியாற்றி தொகுதி மக்களை கவர்ந்தபோதும் தேர்தலில் அவர் வெற்றிபெறவில்லை.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை வேட்பாளராக போட்டியிட மன்சூர் அலிகான் திட்டமிட்டு இருந்தார்.எனினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் சீமான் மீதி அதிருப்தியடைந்த மன்சூர் அலிகான், அக்கட்சியில் இருந்து வெளியேறி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட முடிவு செய்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியை தேர்வு செய்தார். அங்கு இன்று சுயேச்சையாக மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார். வேட்புமனுவில் இடம் பெற்ற விவரங்கள் உண்மை என்று, தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் அவர் வாக்குறுதி அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், முதலில் கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அங்கே கமல்ஹாசன் போட்டியிடுவதால் அவருக்காக, அந்த தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு தொண்டாமுத்தூர் தொகுதி வந்துள்ளேன் என்றார்.
நான் திண்டுக்கல்லில் செய்து வந்ததை, கோவையில் கமல்ஹாசன் செய்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




