--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் மேலவை… 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!!

congress 04

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்; புதிதாகத் தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 22 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில முக்கியமானவை வருமாறு:

 

திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும். புதிதாகத் தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பண மதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனநாயகத்தில் சட்டப்பேரவையும், மேலவையும் இரு கண்களாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், விவாதங்கள் செழுமை பெற மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும். பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தப்படும் என்று, காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon