--- --:--:-- --

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ் மனுதாக்கல்

WhatsApp Image 2021-03-15 at 4.02.21 PM

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.  கூட்டணி கட்சியினர் புடைசூழ வாக்கு சேகரித்த பின்னர், மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக அணி, திமுக அணி, அமமுக – தேமுதிக கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி என்று பலமுனைப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கியது; வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.

 

இந்நிலையில், சுபமுகூர்த்த தினம் என்பதால், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தமிழக அளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால், அரசு அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. திரும்பிய பக்கம் எல்லாம் கட்சிக்காரர்கள் கரை வேட்டியுடன் காணப்படுகிறனர்.

 

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் க. சிவக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குணசேகரன், திமுக சார்பில் முன்னாள் மேயரான செல்வராஜ், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் மேயர் விசாலாட்சி, மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள செல்வராஜ், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் க. சிவக்குமாரிடம் வேட்புமனுவை வழங்கி, அவர் முன்பாக உறுதிமொழி பத்திரத்தை வாசித்தார்.

 

முன்னதாக, திமுக வேட்பாளர் செல்வராஜை, அக்கட்சியினரும் கூட்டணி கட்சி தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர். கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon