போக்குவரத்து விதிகளை மீறினால் காப்பீட்டு கட்டணம் உயரும்..!
போக்குவரத்து விதிகளை மீறினால் காப்பீட்டு கட்டணம் உயரும் என ஐஆர்டிஏ கூறியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வாகன காப்பீடு இணைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒருவர் சாலைவிதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால் அவை குறித்த தகவல்கள் காப்பீடு நிறுவனங்களுடன் பகிரப்பட்டு வாகன காப்பீட்டு கட்டணத்தை நிர்ணயிக்க அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது ஐஆர்டிஏ என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம்.
இது தொடர்பான மாதிரி விதிகள் தயாரிக்கப்பட்டு அவை பொது மக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாலை விதிமீறல்களுக்கென தனித்தனியாக பாயிண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் வருங்காலத்தில் காப்பீடு கோரும்போது வாகனங்களுக்கு காப்பீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
இந்த புதிய நடைமுறையை உருவாக்கும் பொறுப்பு ஐஆர்டிஏ வின் கீழ் செயல்படும் இன்சூரன்ஸ் இன்பர்மேஷன் பியூரோ என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை சேகரிப்பது, பகிர்ந்து கொள்வது எப்படி என்று அந்த அமைப்பு விதிமுறைகளை உருவாக்கும்.
மாநிலங்களில் உள்ள போக்குவரத்து துறையுடனும், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து அந்த அமைப்பு எல்லா தகவல்களையும் பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் முதலில் டெல்லியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.






