நண்பனுடன் சேர்ந்து காதலியை கொலை செய்த காதலன்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகரை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த ஐந்தாம் தேதி 21 வயது இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் சென்னையை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என தெரியவந்தது. தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த அந்த பெண் கடந்த ஒன்றாம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பினார். காவல்துறையினர் ஜெயஸ்ரீயை தேடி வந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்த போது ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணுக்கு ஜெயஸ்ரீ பேசியது தெரியவந்தது. இந்த எண்ணை ஆய்வு செய்தபோது அது ஜெயஸ்ரீ உடன் வேலை பார்க்கும் தங்கதுரை என்பவரது எண் என தெரியவந்தது.
தங்கதுரையை காதலித்து வந்த ஜெயஸ்ரீ விரைவில் திருமணம் செய்து கொள்ள காதலனை வற்புறுத்தியதாக தெரிகிறது. காதல் விவகாரம் தெரிய வந்த பின் ஜெயஸ்ரீயை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ஜெய்ஸ்ரீ தங்கதுரையுடன் சென்றுள்ளார். அவர்களுடன் ஜெகநாதன் என்று சக ஊழியரும் சென்றுள்ளார்.
ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் நின்று மூவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஜெயஸ்ரீயை தங்கதுரையும், ஜெகநாதனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
இருவரையும் காவல்துறையினர் கைது செய்த வேலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அந்த வழியாக வந்த வாகனத்தின் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர்.






