அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழக்குகள் இன்று விசாரணை..!
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் புதிய வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தமிழக அரசின் இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதால் ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வர இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை கேட்ட நீதிபதிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.






