வரதட்சணை கொடுமை – தீக்குளித்த மனைவியை வீடியோ எடுத்த கணவன்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜூஜுனு மாவட்டத்திலுள்ள குடோகோஷி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகிய சில நாட்களுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று அந்த பெண் தீக்குளித்து உள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் அதனை தடுக்காமல் வீடியோவாக பதிவு செய்து பெண் வீட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளார் . அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தீவிரமான தீ காயங்கள் ஏற்பட்டதால் அந்த பெண்ணை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை கைது செய்தனர். மனைவி தீ குளித்ததை கணவர் வீடியோவாக எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






