“நீட்” தேர்வு லட்சணம் இதுதானா? திரிபுராவில் தேர்வு எழுதியவர்கள் 3536 பேர்… தேர்ச்சியோ 88,889 பேர்.. பிரிண்டிங் மிஸ்டேக்காம்
மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், புள்ளி விபரங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை. சின்னஞ் சிறு மாநிலமான திரிபுராவில் மொத்தமே 3536 மாணவர்கள் தான் தேர்வே எழுதிய நிலையில், அதை விட 25 மடங்கு அதிகமாக 88,889 பேர் தேர்ச்சி என கூறப்பட்டுள்ளது.
மிகப் பெரிய மாநிலமான உ.பி.யிலோ 1.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 10% கீழ் தேர்ச்சி என குளறுபடி செய்து விட்டு, வெறும் பிரிண்டிங் மிஸ்டேக் தான் என சமாளித்துள்ள தேசிய தேர்வு அதனை இன்றே சரி செய்து விடுவோம் என மழுப்பியுள்ளது.
நீட் தேர்வு என்றாலே சர்ச்சைதான் என்றாகிவிட்டது. தமிழகத்தில் ஆரம்பம் முதலே நீட் கூடாது என்பது தான் அனைத்து தரப்பினர் மட்டுமின்றி ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. ஆனால் மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது, அதிலும் இந்த கொரோனா நேரத்திலாவது இந்தாண்டு நீட் வேண்டாம் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் எழுந்தது.
ஆனாலும் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ந் தேதி நடைபெற்றது.இதில் விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 1.4 லட்சம் பேர் கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், கடந்த 14-ந் தேதி இவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. மறு தேர்வு முடிந்த பிறகே ஒட்டுமொத்தமாக முடிவுகளை வெளியிடவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதிலும் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிறிய மாநில மான திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதிய நிலையில் 88 ஆயிரத்து 889 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சியடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் இப்படி குளறுபடி என்றால், நாட்டிலேயே பெரிய மாநிலமான உ.பி.யிலும், தெலங்கானா மாநிலத்திலும் தேர்வு எழுதியவர்களில் 10 % கீழ்தான் தேர்ச்சி என பட்டியல் வெளியிட்டு மேலும் குழப்பம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
இந்த குளறுபடிகள் இன்று தான் கண்டறியப்பட்டு வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தேசிய தேர்வு முகமையோ, வெறும் பிரிண்டிங் மிஸ்டேக் தான், மாணவர்களுக்கு தனியே அனுப்பப்பட்ட முடிவுகள் சரியாகவே உள்ளது எனவும், பட்டியலில் உள்ள இந்தத் தவறு இன்றே சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆனாலும் நீட் தேர்வு முடிவுகளில் பெற்றோர், மாணவர்களுக்கு பெருத்த சந்தேகம் உள்ளதாகவே கூறப்படுகிறது.






