--- --:--:-- --

“இந்தித் திணிப்பில் மத்திய அரசு வெறித்தனம்!” முதல்வர் எடப்பாடி தாயார் மறைவு.. அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் குறித்து அதிமுக விமர்சனம்

8.1

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தியில் கடிதம் எழுதியதற்கு அதிமுக தரப்பிலேயே கண்டனம் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது என அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் விமர்சித்துள்ளார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த 4 நாட்களுக்கு முன் காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தொலை பேசியிலும், கடிதம் வாயிலாகவும் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழியில் இரங்கல் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீப காலமாகவே இந்தித் திணிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.நாடு முழுவதும் மும்மொழிக் கல்வி என பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் ‍ எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசோ இருமொழிக் கொள்கைதான் நிலைப்பாடு என உறுதியாக தெரிவித்துள்ளது.

 

ஆனாலும் மத்திய அரசு மூலம் தமிழக அரசுக்கு வரும் கடிதங்கள், கோப்புகள், தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் இந்தி மொழியில் தான் தொடர்கிறது . இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, அமித் ஷா இந்தியில் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளது மேலும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

 

இந்தி மொழி எழுத, படிக்கத் தெரியாத ஒருவருக்கு இப்படி தெரியாத மொழியில் கடிதம் எழுதுவது ஏன்? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட கண்டன அறிக்கையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமையாகும். இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டத்தை சகித்துக்கொள்ள முடியாது.

 

இந்த போக்கு தமிழுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது என்று குற்றம் சாட்டியிருந்தார். நாங்கள் எழுதுவதை தான் படிக்க வேண்டும் என்கிற இந்தி ஆதிக்கவெறி மனப்பான்மை இந்தியாவை கூறு போட்டுவிடும். இந்தி தெரியாது எனக்கூறி அந்தக் கடிதத்தை அமித்ஷாவுக்கே மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியும் இருந்தார்.

 

இந்நிலையில் அதிமுக தரப்பிலும் அமித் ஷாவின் கடிதத்துக்கு பகிரங்க எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சரும், தற்போது கட்சியின் அமைப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சி. பொன்னையன் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது: அமித்ஷாவின் தாய் மொழியே இந்தி கிடையாது.அப்படியிருக்கையில் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என சி.பொன்னையன் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon