--- --:--:-- --

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருமாண்டிச்செல்லிபாளையம் பேரூராட்சி  பூஜ்ஜியம்!

fh

லகமே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க சுத்தம், சுகாதாரம் அவசியம் என்பதே ஒரே தீர்வாக கருதி சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகளில் நாடு முழுவதும் உள்ள அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் விறுவிறுப்பு காட்டுகின்றன.

 

கொடுமையிலும் கொடுமை

 

ஆனால் ஈரோடு மாவட்டம் கருமாண்டிச்செல்லிபாளையம் பேரூராட்சியிலோ எல்லாமே தலைகீழ்தான். செயல் அலுவலர் கிருஷணன் பணி அலட்சியத்தால்  கொரோனா தடுப்பு பணிகள் சுத்த பூஜ்ஜியமாக இருப்பது தான் பெருங் கொடுமையிலும் கொடுமை ரகமாக உள்ளது.

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிச்செல்லிபாளையம் பேரூராட்சி, ஈரோடு&பெருந்துறை மாநில நெடுஞ்சாலை சாலையில் இந்த பேரூராட்சி அமைந்துள்ளது. மாவட்டத்தின் அருகாமையில் உள்ளதாலோ என்னவோ, இந்த பேரூராட்சி நிர்வாகத்தின் அவலத்தை மாவட்ட உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனரோ என்று தோன்றுமளவுக்கு எல்லாப் பணிகளும் படு மந்தமாகவே காணப்படுகிறது.

 

கொடிய இந்த கொரோனா காலத்தில் சமூக அக்கறையுடன் ராப்பகல் பாராது, உயிரை பணயம் வைத்து உள்ளாட்சி நிர்வாகங்களின் கீழ் பணிபுரியும் சுகாதார, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் பெரும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பணியாற்றுவதை கண்கூடாக காண முடிகிறது.

 

இந்த கொரோனா பரவலை தடுக்க பல ஊர்களிலும் வீதிகள், தெருக்கள் தோறும் குப்பைகள் தினசரி 2 ,3 முறை அகற்றப்படுகின்றன. கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது என தெருக்கள் பளிச்சென சுகாதாரமாக காணப்படுவதை கண்கூடாக காண முடிகிறது. உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை உள்ளாட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் அத்தனை பேரும் ராப்பகலாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணிகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நாறிக் கிடக்கிறது

 

ஆனால் கருமாண்டிச்செல்லிபாளையம்  பேரூராட்சியிலோ சுத்தம், சுகாதாரம் என்றால் என்ன விலை? எனுமளவுக்கு நகர்ப் பகுதி முழுவதும் நாறிக் கிடக்கிறது.

 

பொது கழிப்பிடங்களில் ஆட்கள் நுழைய முடியாத அளவுக்கு அசிங்கம் துர்நாற்றமெடுத்து கிடக்கிறது. தெருக்களில், சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. அரைகுறையாக அள்ளும் குப்பைகளையும், முறையாக திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு சேர்ப்பதில்லை.

 

மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பதும் கிடையாது. கண்ட இடங்களிலும் குப்பையை தீ வைத்து புகை மூட்டத்தை உருவாக்கி கடமை முடிந்தது என நினைப்பதை காண முடிகிறது. கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. சாக்கடை வசதி இல்லாததால், தேங்கிய கழிவுநீர், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

செய(ல்)லற்ற அலுவலர் கிருஷ்ண
செய(ல்)லற்ற அலுவலர் கிருஷ்ணன்

 

 

 

இதற்கெல்லாம் பேரூராட்சியை நிர்வகிக்கும் செய(ல்)லற்ற அலுவலர் கிருஷ்ணனின் மெத்தனப் போக்குதான் காரணம். கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் உள்ளதால் தட்டிக் கேட்க ஆட்கள் உள்ளனர். ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதிகாரிகளின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும்,இந்த கொரோனா காலத்தில் மற்ற நகரங்களில் அதிகாரிகள் ஓரளவுக்கு அக்கறை எடுத்து செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர்.

 

ஆனால் கருமாண்டிச்செல்லிபாளையம்  பேரூராட்சியை நிர்வகிக்கும் அதிகாரிகளின் மக்கள் பணி என்பதோ, கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி என்பதோ சுத்த ஜீரோவாகவே உள்ளது. 

 

இப்படியே நிலைமை போனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் சற்று குறைந்த எண்ணிக்கையில் உள்ள வேளையில், கருமாண்டிச்செல்லிபாளையம்   பேரூராட்சியின் அலட்சியத்தால் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து விடுமோ? என அச்சப்பட வைக்கிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட அமைச்சர், தொகுதி எம்எல்ஏ போன்றோர் கருமாண்டிச்செல்லிபாளையம் பேரூராட்சி அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றினால் நல்லது.

Leave a Reply

Right Menu Icon