திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது..!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தேர்தலை நடத்த நீதிபதி ஜெயசந்திரனை தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்வரும் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வரும் 15ஆம் தேதி முதல் 23ம் தேதி மாலை 3.30 மணி வரை வேட்பு மனு தாக்கலை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் 23ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.





