வேளாண் சட்டத்தை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை எதிர்க்கின்றனர்..!
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை திறந்த வெளி சந்தையில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக விற்கக் கூடாது என நினைப்பவர்கள்தான் வேளாண் சட்டத்தை எதிர்க்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி எதிர்ப்பதை மட்டுமே ஒரே பணியாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவர்கள் என கூறியவர் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருளை திறந்த வெளி சந்தையில் சுதந்திரமாக விற்கக் கூடாது என அவர்கள் நினைக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.
ஜன் தன் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி, ரஃபேல், ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் ஒரே ஒரு கட்சி மட்டுமே தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் காங்கிரஸ் கட்சியை அவர் மறைமுகமாக சாடினார்.
மேலும் வேளாண்மை துறையில் கடவுளாக கருதப்படும் டிராக்டர் மற்றும் கருவிகளை தீவைத்து விவசாயிகளை அவமதிக்கின்றனர் என்று பிரதமர் கடுமையாக விமர்சனம் செய்தார்.






