பெண்களை அவமதித்து யூடியூப் சேனல் நடத்தியவர் மீது தாக்குதல்..!
கேரளாவில் பெண்களை அவமதித்து யூடியூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் நாயர் என்பவர் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமி மேலும் சிலர் விஜய் நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கினர்.
விஜய் நாயர் கைகளாலேயே வீடியோக்கள் அழிக்கப்பட்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்து அந்த காட்சிகளை யூடியூபில் வெளியிட்டனர். தாக்குதல் குறித்து விஜய் கொடுத்த புகாரையடுத்து மூன்று பெண்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






