” புல் மப்பில் ” சூலூர் எஸ்.ஐ.அவரின் கார் உரசி சென்றதில் டூவீலரில் சென்ற குழந்தை படுகாயம். மருத்துவமனைக்கு பார்க்க சென்ற இன்ஸ்பெக்டரின் கார் மோதி ஆட்டோவில் சென்ற 5 பேர் படுகாயம் !!!
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சார்லஸ்(50). இவர் நேற்று பணி முடிந்து காரணம்பேட்டை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது,சூலூர் கொங்கு மஹால் திருமண மண்டபம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது அதே பாதையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார்.
இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் குழந்தை படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளர் சார்லஸ் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
சூலூர் விமானப்படைத் தளம் அருகே செல்லும் போது சார்லஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி எதிர்புறத்தில் இருக்கும் விமானப்படைத்தள சுவற்றில் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சார்லஸ் படுகாயமடைந்தார்.சிறப்பு உதவியாளர் ” புல் மப்பில் ” இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாலையில் தனது காரில் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.கார் மருத்துவமனையின் எதிர்புறம் வந்தபோது குறுக்கே வந்த பயணிகள் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் ஆட்டோவில் வந்த குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.இதில் ஆட்டோவில் வந்த போத்தனூரைச் சேர்ந்த சஹீனா(23),சபிஅகமத்(27), அஸ்லாம்(49), சஹானா(44),இதயத்துள் ஹுசைன் என்ற 2 வயது குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.இவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தில் ஆட்டோவின் மீது மோதிய ஆய்வாளரின் கார் நிற்காமல் சாலையின் எதிர் திசையில் சென்று தலைமறைவானது.
கார் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமானது.ஆனால்,காரில் வந்தது அவர் தானா ? இல்லையா ? என்பது தெரியவில்லை.
இவ்விரண்டு விபத்திலும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







